17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு! பாஜக முன்னாள் எம்எல்ஏ குற்றவாளி என தீர்ப்பு
பாலியல் வன்கொடுமை புகார் அளித்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்திலேயே மரணம். சிறுமி சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாகி உறவினர் மற்றும் வழக்கறிஞர்கள் மரணம் என திகிலுடன் சென்று கொண்டிருந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 2017ஆம் ஆண்டு அங்குள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் எம்எல்ஏ செங்கார் தன்னை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக அவர் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரிக்க காவல்துறையினர் தயக்கம் காட்டினார். வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்ட நிலையில் சிறுமியின் தந்தை காவல் நிலையத்திலேயே உயிரிழந்தார். செங்கார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதன் பின்னரே இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வர விசாரணையை தொடங்கினார் காவல்துறையினர்.
இதனிடையே சிறுமியின் தாயார் மற்றும் வழக்கறிஞர் உள்ளிட்டவர்கள் சென்றுகொண்டிருந்த காரும் விபத்துக்குள்ளானது. இதில் சிறுமியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் உயிரிழந்தனர். இதன் பின்னணியிலும் செங்கார் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கி பாஜக தலைமை உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணை லக்னோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். இதனையடுத்து வழக்கு விசாரணையை டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டது. இதில் பாலியல் வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், செங்கார் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அவருக்கான தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் செங்காய் மீதான விபத்து, கள்ளத்துப்பாக்கி வழக்கு, சிறை மரணம் உள்ளிட்ட வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




