--- --:--:-- --

144 தடை உத்தரவு எதிரொலி! போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் இரு மடங்கு கட்டணம் செலுத்தி தனியார் சுற்றுலா வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் அவலம் !!!

4

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் லேட்டாக எடுத்தாலும், இப்போது துரித கதியில் அவசர அவசரமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில், உரிய திட்டமிடாமல், முன்னெச்சரிக்கை இன்றி பல்வேறு குளறுபடியான அறிவிப்புகளால் அப்பாவி பொது ஜனங்களின் பாடுதான் படு திண்டாட்டமாக உள்ளது.

 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக நேற்று பிற்பகல் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். நாளை (இன்று) மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், இதனால் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து அனைத்தும் முடங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

 

இந்த நிலையில் தமிழகத்தின் சென்னை, கோவை, திருப்பூர் என்றில்லாமல், அனைத்து நகரங்களிலும் சொந்த ஊர் செல்ல மக்கள் பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்த மக்கள் பட்ட பாடு தான் கொடுமையிலும் கொடுமை. ஏற்கனவே ஓடிக் கொண்டிருந்த பேருந்துகளில் பாதி அளவு கூட இயக்கப்படாததால் பரிதவித்தனர். கிடைத்த பேருந்துகளில் இடம் பிடிக்க ஜன்னல் வழிகளில் எல்லாம் தொற்றினர். கொரோனாவை வரவிடாமல் தடுக்க ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி தேவை என்று விழிப்புணர்வு வாசகங்கள், பிரச்சாரங்கள் எல்லாம் அடியோடு காணாமல் போனது. பேருந்துகளில் கால் வைக்கக் கூட இடமில்லாத அளவுக்கு 10 மணி நேரம் வரை கூட ஒருவரையொருவர் நெருக்கிக் கொண்டு பயணித்த அவலம் அரங்கேறியது.

தொழில் நகரமான கோவையில் மதுரை,தேனி,திண்டுக்கல்,ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் திருச்சி,தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிற்சாலைகள்,வணிக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் பள்ளி,கல்லூரிகள் பயில்வோர் என பல்லாயிரக்கணக்கானோர் தங்கி உள்ளனர். பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் வெளியூர்வாசிகள் தான்.

 

இந்த நிலையில் தமிழக முதல்வரின் இந்த திடீர் 144 தடை உத்தரவு அவர்களை கலங்க செய்தது.திடீர் அறிவிப்பால் கலங்கி போன மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து நிலையத்தை நோக்கி படையெடுத்தனர்.அறிவிப்பு வெளியிட்ட இரண்டாம் நாளான இன்றும் நேற்று செல்ல முடியாதவர்கள் இன்று பேருந்து நிலையத்திற்கு வந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.பேருந்துகள் சொற்ப அளவிலேயே இயக்கப்பட்டன.

 

இதனால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு வெளியே தனியார் சுற்றுலா வேன்களில் இரு மடங்கு கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் சுற்றுலா வேன் உரிமையாளர்கள் அடித்த கொள்ளை தான் எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்ற கொள்ளை நடந்தேறியது.கோவையில் இருந்து மதுரை செல்ல அரசுப்பேருந்துகளில் ரூ.160 கொடுத்து பயணித்து வந்த நிலையில் தனியார் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ரூ.500 வரை சகட்டுமேனிக்கு வசூலித்து வருகின்றனர்.அதே போல் கோவையில் இருந்து திருச்சிக்கு அரசுப்பேருந்துகளில் ரூ.160 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இதுபோன்ற தனியார் வேன் ஓட்டுநர்கள் ரூ.500 வரை அடாவடி வசூல் செய்து வருகின்றனர்.

சில பயணிகள் தனியார் வேன் ஓட்டுநர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததால் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

தமிழக அரசின் இந்த திடீர் 144 தடை உத்தரவால் பொதுமக்கள் பெரும் பாடுபட்டு வரும் நிலையில் அதில் கோவையில் தங்கி பணிபுரிந்து வரும் பெண்களின் நிலைமையோ சொல்ல முடியவில்லை.பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து கூடுதல் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தனியார் வேன் உரிமையாளர்களின் கட்டண கொள்ளையினை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Right Menu Icon