10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 100 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி..!
கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த எஸ்எஸ்எல்சி தேர்வு கொரொனா பரவல் மற்றும் பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பின் மாணவ-மாணவிகள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 100 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tn results.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
மேலும் பள்ளிகளில் பதிவு செய்த கைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மதிப்பெண்கள் சார்ந்த குறைகள் இருப்பின் வரும் 17ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.







