கொரொனா அச்சத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!
துபாய்க்கு வேலைக்கு சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் தனது கொரொனா இருப்பதாக கூறி பீதி அடைந்து அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிழைப்பதற்காக துபாய் சென்ற மணிகண்டன் தேவையற்ற பீதியால் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் அடுத்த சின்னமாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் 26 வயதான மணிகண்டன் .
மணிகண்டன் அவரது தம்பி அய்யனாரும் நான்கு ஆண்டுகளாக துபாயில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். கடந்த ஆண்டு இருவரும் ஊருக்கு திரும்பினார் .மணிகண்டனுக்கு கள்ளக்குறிச்சி அடுத்த குதிரை சந்துரு கிராமத்தை சேர்ந்த உஷா ராணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு மாதங்கள் ஊரில் இருந்த அவர் மீண்டும் துபாய்க்கு வேலைக்கு சென்றார்.
அவருடன் தம்பி அய்யனாரும் சென்ற அவர் இருவரும் துபாயில் ஒரே இடத்தில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இதற்கிடையே மணிகண்டன் மனைவி உஷா ராணி க்கு பெண் குழந்தை பிறந்து ஒரு வயதாகி உள்ளது. இந்த நிலையில் மணிகண்டனுக்கு தொண்டை வலி போன்ற சில அறிகுறிகள் இருந்ததால் அவர் தனக்கு கொரொனா வந்திருக்குமா என்று பயந்துள்ளார்.
தம்பியிடம் புலம்பிய மணிகண்டன் தன்னுடைய மனைவியை தொடர்பு கொண்டு பீதியை வெளிப்படுத்தியுள்ளார். மனைவியும் அப்படி எல்லாம் இருக்காது கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மணிகண்டன் அருகில் உள்ள மருத்துவமனையில் சென்று பரிசோதித்து உள்ளார். பரிசோதனையில் அவருக்கு கொரொனா இல்லை என்பது தெரிய வந்த நிலையில் மருந்து சாப்பிட்டால் தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சினைகள் சரியாகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எனினும் அதை நம்பாத மணிகண்டன் தனக்கு கொரொனா வைரஸ் வந்து விட்டதாகவே நம்பி அடிக்கடி புலம்பி வந்துள்ளார். மேலும் தம்பி மற்றும் உடன் பணியாற்றியவரிடமிருந்து தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் திடீரென்று மணிகண்டன் காணாமல் போனார். இரண்டு நாட்களாக அவரை தேடி வந்த நிலையில் தங்கியிருந்த இடத்தின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து அவருடைய சடலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. தாயும், மனைவியும் கதறியதைப் பார்த்து ஊரே சோகத்தில் மூழ்கியது. வேலை பார்க்க சென்ற இடத்தில் வைரஸ் தொற்று தனக்கு வந்துவிட்டதாக பயந்து ஒரு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







