--- --:--:-- --

தாயாரின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற அஜித்..!

10

டிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். தந்தையின் மறைவுக்குப் பிறகு, அஜித்தின் தாயார் மோகினி வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு இருந்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் தாயார் இறுதிச்சடங்கு தனிப்பட்ட நிகழ்வாக நடக்கும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடிகர் அஜித்குமாரின் சகோதரர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், தங்களது தாயார் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மறைந்துள்ளதாகவும், அவரது இறுதிக் காலத்தில் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர். தங்களது தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் அனைவரது அன்பும் தங்களை நெகிழச் செய்துள்ளதாகவும் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் தெரிவித்தனர்.

 

எனினும், சென்னை ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அஜித்தின் தாயார் மோகினி உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அஜித்குமாரை முதலமைச்சர் விஜய் ஆரத்தழுவி ஆறுதல் கூறினார். இதேபோன்று நடிகை திரிஷாவும் அஜித்குமாருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதேபோல், நடிகர்கள் சரத்குமார், நாசர், இயக்குனர்கள் ஷங்கர், ஏஎல் விஜய், சிவா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.

 

இதற்கிடையே, அஜித் குமாரின் தாயார் உடலுக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று (ஞாயிறு) காலை இறுதிச்சடங்கு நடைபெற்றது. அஜித்தின் ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் இருந்து பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு மோகினியின் உடல் கொண்டுவரப்பட்டது. வண்டியில் கொண்டுவரப்பட்ட தாயின் உடலை கடைசி ஒருமுறையாக தனது தோளில் தூக்கி மயானத்திற்குள் கொண்டு சென்றார் அஜித். இதன்பின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடந்தன. அஜித்தின் சகோதரர் அனில் குமார் இறுதிச்சடங்கை செய்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon