தவறான சிகிச்சையால் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு..!
திண்டிவனம் அருகே பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் இறந்துவிட்டதாக கூறி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் அடுத்த ஏந்தூர் கிராமத்தை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவரின் மனைவி சந்தியா கருவுற்று இருந்த நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சுமார் 2 மணி நேரம் சிகிச்சைக்கு பிறகு பிறந்த குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் சந்தியாவுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக கூறி கடந்த 11ஆம் தேதி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சந்தியாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பொழுது திண்டிவனம் சார் ஆட்சியர் தலைமையில் சம்பவம் குறித்து பணி விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.





