--- --:--:-- --

சென்னையில் திங்கள்கிழமை பள்ளிகள் செயல்படுமா?

3

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் பெய்த மழையால் சென்னையின் பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த மழையில் 90 சதவீதம் வடிந்துவிட்டதாக கூறினார்.

 

கடந்த காலங்களில் நீர்நிலைகளாக இருந்த சில பகுதிகள் தற்போது பட்டா நிலமாக மாறி, குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதால் அந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாவும், அவற்றையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

மேலும், மழைநீர் வடிகால்கள் சரியாக இருந்த போதிலும், கடல் உள்வாங்காததே சாலைகளில் தண்ணீர் தேங்க காரணம் என்றும் கூறிய அவர், அடுத்த 48 மணி நேரத்தில் வெள்ளநீரை முழுமையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

 

மழைநீர் வெள்ளம் வடிந்த பின் செய்ய வேண்டிய பணிகள் மிகவும் சவாலாக இருப்பதாகவும், சேறு சகதி, குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி நடப்பதாகவும், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். முழுமையாக இயல்பு நிலை திரும்புவதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் எனவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

 

சென்னை மாநகராட்சியில் உள்ள 420 பள்ளிகளில் 6 பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. 30 காலை உணவு தயாரிக்கும் மையங்களில் 5 ல் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த பள்ளிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 

எல்லா பள்ளிகளையும் திங்கட்கிழமை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள 6 பள்ளிகளை திறப்பதா? மாற்று இடத்தில் இயக்குவதா? விடுமுறை அளிப்பதா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

Right Menu Icon