--- --:--:-- --

நாளை வெளியாகுமா பராசக்தி?

4

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம், நாளை வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஜனநாயகன் திரைப்படத்தைப் போலவே, பராசக்தி படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. 25க்கும் மேற்பட்ட இடங்களில் கட் செய்ய தணிக்கைக் குழு கூறியதாகவும், இதனால் மறு ஆய்வுக்காக ரிவைசிங் கமிட்டியை பராசக்தி படக்குழு அணுகியதாகவும் சொல்லப்படுகிறது.

 

படத்தை பார்த்த ரிவைசிங் கமிட்டி, 8 முதல் 10 இடங்களில் கட் செய்ய அறிவுறுத்தியதாக தெரிகிறது. படத்தில் சில மாற்றங்களை செய்ய சொல்லி, UA சான்றிதழ் வழங்குவதாக தயாரிப்பு நிறுவனத்திற்கு, ரிவைசிங் கமிட்டி தெரியப்படுத்தியதாக அண்மையில் தகவல் வெளியானது. ஆனாலும், பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. பராசக்தி படக்குழுவிடம் ரிவைசிங் கமிட்டி கேட்டிருக்கும் வரலாற்று தரவுகள்தான் இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

 

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி, 1960களில் நடைபெறுவது போன்ற கதைகளத்தை கையில் எடுத்திருக்கிறது பராசக்தி திரைப்படம். படத்தை பார்த்த ரிவைசிங் கமிட்டி அதில் சில காட்சிகள் குறித்து, பராசக்தி குழுவினரிடம் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. அப்போது வரலாற்று அடிப்படையில் திரைப்படத்தை எடுத்திருப்பதாக பராசக்தி படக்குழு கூறியதாகவும், அப்படி என்றால் அதற்கான வரலாற்று தரவுகளை தாக்கல் செய்யுமாறு ரிவைசிங் கமிட்டி தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

இதையடுத்து, அதற்கான சான்றுகளை படக்குழுவினர், ரிவைசிங் கமிட்டிக்கு சமர்ப்பித்ததாகவும், ஆனால் அந்த சான்றுகள் போதவில்லை என்று ரிவைசிங் கமிட்டி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, பராசக்திக்கான தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், திட்டமிட்டபடி பராசக்தி நாளை வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

 

விஜயின் கடைசி படமான ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் 25ஆவது படமான பராசக்தி என இரண்டும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக இருந்த நிலையில், இரு படங்களுக்கும் அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டிருப்பது, சினிமா ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.

 

இதனால், ‘பராசக்தி’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், “உங்களுக்கு என்ன கவலை இருந்தாலும் அதைப் பற்றி யோசிக்காதீர்கள். நல்லதே நடக்கும்” என அப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் தெரிவித்த கருத்துகள் தான் இவை.

 

திருச்சியில் நடைபெற்ற பராசக்தி படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், மொழிக்காக, மண்ணிற்காக தியாகம் செய்தவர்களுக்கு நன்றி கூறும் படம் தான் பராசக்தி என்று தெரிவித்தார். மக்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இந்த படம் இருக்கும் என்றும் சிவகார்த்திகேயன் கூறினார். ரவி மோகன் கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

Right Menu Icon