நீட் விலக்கு மசோதாவை நிராகரிக்க ஆளுநர் கூறிய காரணங்கள்?
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்புமாறு ஆளுநரை தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்த நிலையில் மசோதவை மறுபரிசீலனை செய்யுமாறு பிப்ரவரி 1-ஆம் தேதி சட்டப்பேரவை தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் நீட்விலக்கு மசோதாவுடன் அனுப்பப்பட்ட ஏ.கே ராஜன் குழுவின் அறிக்கையில் பல்வேறு ஆதாரமற்ற அனுமானம் இருப்பதாக ஆளுநர் கூறியிருப்பதாக அறியப்படுகிறது.
நீட் தேர்வுக்கு முன்பு அரசு பள்ளி மாணவர்கள் சொற்ப அளவிலேயே மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக ஏ.கே.ராஜன் அறிக்கையில் அளித்துள்ள புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர் இது அரசு பள்ளிகளின் மோசமான நிலையை காட்டுவதாக கூறியுள்ளதாக தெரிகிறது. பயிற்சி வகுப்புகளால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.







