பாம்பு கடித்ததால் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த நபர்..!
தன்னை பாம்பு ஒன்று தாக்கி விட்டதாக கூறி அந்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாலகிருஷ்ணா நகரில் வசித்து வரும் தருமன் கூலி வேலை பார்த்து வருகிறார்.
தருமன் தனது வீட்டில் மது போதையில் தூங்கி கொண்டிருக்கும் வேளையில் சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு அவரை தீண்டியது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் தருமன் தன்னைக் கடித்த பாம்பை லாவகமாக பிடித்து அதனை எடுத்துக்கொண்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
பாம்புடன் வந்தவரை கண்டு நோயாளிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால் தருமன் அமைதியாக டாக்டர் அறையை நோக்கி பாம்புடன் சென்றதால் மருத்துவ ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பதறிப்போய் உள்ளனர்.
அவரை கடித்த பாம்பு விஷமற்ற பாம்பு என்பதால் அதற்கேற்ற மருந்து மாத்திரைகளை மருத்துவர்கள் கொடுத்தனுப்பினார். சிகிச்சை பெற்ற பின்னரும் தன்னைக் கடித்த பாம்பை விடாமல் பார்சல் கட்டி தன்னுடன் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.






