--- --:--:-- --

ரோபோ சங்கர் மறைவுக்கு காரணம் என்ன..?

2

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை சினிமாவுக்கு வந்தவர் ரோபோ சங்கர். இவர் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். பெரிய திரை, சின்னத்திரை என பிஸியாக இருந்த சமயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடுமையாக உடல் எடை குறைந்து மீண்டு வந்தார்.

 

பின்னர் மெல்ல தேறி வந்த அவர் மீண்டும் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை துரைப்பாக்கத்தில் ‘காட்ஸில்லா’ படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனடியாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

 

மேலும் தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே, ரோபோ சங்கரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கரின் உயிரிழப்பு வரை செல்ல காரணம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, ரோபோ சங்கர் இரைப்பை குடலில் ரத்தக் கசிவு மற்றும் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவருக்கு சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவரது வயிற்றுப் பகுதி மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வந்ததாகவும் கூறியுள்ளது. எனினும், அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்து வந்ததாகவும் நேற்றிரவு 9.05 மணியளவில் உயிர் பிரிந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

 

ரோபோ சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Right Menu Icon