--- --:--:-- --

சபாஷ், சரியான நடவடிக்கை! மக்கள் நலனில் 15,வேலம்பாளையம் போலீசார் வேகம்.. ‘குற்றம் குற்றமே’ செய்தியால் கஞ்சா ஆசாமிகள் சோகம்

SFsadf

போதைப்பொருள் பயன்படுத்தும் ஆசாமிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை “குற்றம் குற்றமே” சுட்டிக்காட்டிய நிலையில், 15வேலம்பாளையம் போலீசார் வேகமாக செயல்பட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்தியதால், இது, பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையையும் பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இதனால், நகரை ஒட்டிய புறநகர்ப்பகுதிகளாக இருப்பதால், சமூக விரோதச் செயல்களும், சட்டம் ஒழுங்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

 

எனவே, காவல்துறையினரின் கண்காணிப்பை இன்னும் பலப்படுத்த வேண்டும்; கஞ்சா போட்டுக் கொண்டு வழிப்பறி, செயின்பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இது தொடர்பாக, நமது “குற்றம் குற்றமே” இணையதளத்தை பலரும் தொடர்பு கொண்டு தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். குறிப்பாக, திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் தாண்டியதும் ரயில்வே மேம்பாலம் பணி நடைபெறும் பகுதியில் கஞ்சா போட்டுக் கொண்டு சமூகவிரோதிகள் அட்டகாசத்தில் ஈடுபடுவதை, நாம் சுட்டிக் காட்டி இருந்தோம்.

 

இது தொடர்பான “குற்றம் குற்றமே” இணையதள செய்தி, சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது. திருப்பூர்வாசிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நமது செய்தியின் எதிரொலியாக, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர்  A.G.பாபு  கவனத்திற்கு சென்றது. 15,வேலம்பாளையம் போலீசாருக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

 

அதன்படி, 15,வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார், மின்னல் வேகத்தில் களமிறங்கினர். “குற்றம் குற்றமே” செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டு இருந்த ஜெ.ஜெ. நகர் பகுதி உள்ளிட்ட இடங்களில், உடனடியாக கண்காணிப்பையும், ரோந்து பணியையும் தீவிரப்படுத்தினர்.

அத்துடன், அந்த பகுதியில் கஞ்சா  போதையில் இருந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில், இனி அடிக்கடி ரோந்து செல்வது என, 15 வேலம்பாளையம் போலீசார் சுறுசுறுப்பாக களமிறங்கியதோடு, குற்றவாளிகள் சிலரை பிடித்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையும், நிம்மதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

இது குறித்து, பொதுமக்கள் சிலர் நம்மிடம் கூறுகையில், “குற்றம் குற்றமே” இணையதளமும் சரி, வாரஇதழும் சரி, திருப்பூர் மக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிடுவதோடு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்கிறது. இதனால், கைமேல் பலன் கிடைக்கிறது.

 

சமூக விரோதச் செயல்கள், கஞ்சா பயன்பாடு குறித்து “குற்றம் குற்றமே” செய்தி வெளியான அடுத்த நாளே, காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக, காவல் ஆணையர், வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், அத்துடன் இதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த “குற்றம் குற்றமே” இதழுக்கு மனமார்ந்த நன்றி” என்றனர்.

 

மக்களின் கருத்தறிந்து செயல்பட்ட 15.வேலம்பாளையம் காவல்துறையினர் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். அதே நேரம், பெயரளவுக்கு சில நாட்கள் வேகத்தை காட்டிவிட்டு மீண்டும் கண்காணிப்பு, ரோந்து பணிகளில் அலட்சியம் காட்டிவிடக்கூடாது; சமூக விரோதிகளை தொடர்ந்து கண்காணித்து, அவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Right Menu Icon