அதிமுக ஆட்சியில் பங்கேற்போம்… பாஜக பரபரப்பு பேச்சு!
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் போது அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அடுத்து அதிமுக ஆட்சி அமையும் போது, அதில் பாஜக நிச்சயம் அங்கம் வகிக்கும் என்று, மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜி.பாண்டுரங்கனை ஆதரித்து, அவர் வாக்குச் சேகரித்தார். பின்னர் நிருபர்களுக்கு வி.கே.சிங் அளித்த பேட்டி:
தற்போது நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தல் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. ஏனெனில், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமைகள் இல்லாத தேர்தல் ஆகும். மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 11 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளன. 2022 முடிவதற்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு என்ற லட்சியத்துடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் குழாய்கள் மூலம் தரமான குடிநீர் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். தொழில்முனைவோரின் கூடாரமாக தமிழகத்தை மாற்றுவோம். புதிய தொழில் தொடங்க பல தளர்வுகளை அறிவிப்போம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அப்போது, அதிமுக தலைமையிலான ஆட்சியில் நிச்சயம் பாஜகவும் அங்கம் வகிக்கும் என்றார்.
அதிமுக ஆட்சி அமையுமா என்பதே தெரியாத நிலையில், அதிமுக அதிகாரத்திற்கு வந்தால் பாஜகவும் அமைச்சரவையில் இடம் பெறும் என்ற பாஜக தலைவரின் பேச்சு, அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.





