காங்கிரஸ் எம்எல்ஏவின் உறவினர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவால் பெங்களூருவில் வன்முறை..!
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏவின் உறவினர் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதை கண்டித்து ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு புளிகேஷி நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் தங்கை மகன் நவீன் மத நல்லிணக்கத்தை குலைக்கும் விதமாக கருத்தை முகநூலில் பதிவிட்டு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து டிஜெகல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய மறுக்கபட்டதாகக் கூறப்படுகிறது.
ஆத்திரமுற்ற அப்பகுதி மக்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கற்கள் வீசப்பட்டதோடு வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. பைசந்திர பகுதியில் உள்ள எம்எல்ஏ ஸ்ரீநிவாச மூர்த்தியின் வீடும் கல்வீசி தாக்கப்பட்டது. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.
வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. நிலைமை மோசமானதால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 60-க்கும் அதிகமானோர் படுகாயமுற்றதாகவும் பெங்களூரு காவல் ஆணையர் கூறினார். வன்முறை தொடர்பாக இதுவரை 30 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெங்களூர் முழுவதும் 144 தடை உத்தரவும் டிஜெ கல்லி, கேஜெ கல்லி காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமை குறித்து காவல்துறையிடம் கேட்டறிந்த முதலமைச்சர் எடியூரப்பா அமைதியை நிலைநாட்டுமாறு அறிவுறுத்தியுள்ளார்.







