--- --:--:-- --

கரூர் அசம்பாவிதம் குறித்து விஜய் வீடியோ..!

4

ரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இது குறித்து இன்று  வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் என் வாழ்க்கையில் இப்படி வலியான சூழ்நிலையை சந்தித்ததில்லை. மனம் முழுக்க வலி… வலி மட்டும்தான். இந்தச் சுற்றுப்பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருகிறார்கள்.

 

அதற்கு அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும், பாசமும் மட்டும்தான் காரணம். அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். அதனால் தான் இந்தச் சுற்றுப்பயணத்தில் மற்ற விஷயங்களைவிட மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருந்துவிடக் கூடாது என்பது தான் என் மனதில் இருக்கும். அதன் காரணமாகத்தான் அரசியலை எல்லாம் ஒத்திவைத்துவிட்டு, மக்களின் பாதுகாப்பை மட்டும் மனதில் வைத்து இடங்களைத் தேர்வு செய்து, காவல்துறையிடம் அனுமதி கேட்கிறோம். ஆனால் நடக்கக்கூடாதது நடந்துவிட்டது.

 

நானும் மனிதன் தானே. அவ்வளவு பேர் பாதிக்கப்படும்போது அங்கிருந்து எப்படி அங்கிருந்து கிளம்பிவர முடியும். நான் திரும்பவும் அங்கு போக வேண்டும் என இருந்தால், அதனை காரணம் காட்டி அதனால், அங்கு பதட்டமான அல்லது அசம்பாவிதங்கள் நடந்துவிடக்கூடாது என்பதால்தான் நான் அதனை தவிர்த்துவிட்டேன். இந்த நேரத்தில் தன் சொந்தங்களை இழந்து தவிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

என்ன சொன்னாலும் ஈடாகாது என்பது எனக்குத் தெரியும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். கூடிய விரைவில் உங்க அனைவரையும் நான் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் எங்கள் வலிகளையும், நிலைமையையும் புரிந்துகொண்டு எங்களுக்காகப் பேசிய அரசியல் தலைவர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

ஐந்து மாவட்டங்களுக்கு பிரச்சாரத்திற்குச் சென்றோம். ஆனால், ஏன் கரூரில் மட்டும் இப்படி நடக்கிறது? எப்படி நடக்கிறது என அனைத்து உண்மையும் மக்களுக்குத் தெரியும். மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் உண்மைகளைச் சொல்லும்போது கடவுளே நேரில் இறங்கிவந்து உண்மைகளைச் சொல்வது போல் எனக்கு இருந்தது. விரைவில் அனைத்து உண்மைகளும் வெளியே வரும்.

எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்கள் பேசினோம். அதனைத் தவிர எந்தத் தவறையும் நாங்கள் செய்யவில்லை. ஆனால், எங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீதும், சமூக வலைதளங்களில் இருக்கும் தோழர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார்கள். சி.எம். சார் உங்களுக்கு பழிவாங்க வேண்டும் என்று இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அவர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன் அல்லது அலுவலகத்தில் இருப்பேன். நம் அரசியல் பயணம் இன்னும் வலிமையாகவும், தைரியமாகவும் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon