வாரிச்சுருட்டிய `வள்ளல்’.. வீசியெறிந்த கலெக்டர்..!! சட்டத்தை மதிக்காத கனிம வளத்துறை அதிகாரிக்கு சாட்டையடி! மக்களுக்கு மகிழ்ச்சி தந்து விடைபெற்றார் திருப்பூர் கலெக்டர்!
கனிம வள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த புகாருக்கு ஆளான, திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் கே.எல்.கே வள்ளலை, பணியில் இருந்து விடுவித்து கலெக்டர் வினீத் துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டார். பதவியில் இருந்து விடைபெறும் முன்பு கலெக்டர் செய்த தரமான சம்பவத்தால் விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநராக இருந்து வந்தவர் கே.எல்.கே. வள்ளல். இவரது அலுவலகம், கலெக்டர் வளாகத்தில் 6-வது தளத்தில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் விதிமீறி செயல்படும் கல் மற்றும் மண் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களிடம் லஞ்சம் பெற்று முறைகேடுக்கு துணை போனதாக, இவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குறிப்பாக காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு கனிமவளம் சுரண்டப்படுவதாக விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டி வந்தனர். கனிமவளத்துறை உதவி இயக்குனராக இருந்த வள்ளலிடம், இது குறித்து விவசாயிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
கொள்ளை போகும் கனிம வளம்!

மாறாக, கல் குவாரி குறித்து புகார் மனு அளிக்க தனது அலுவலகத்திற்கு வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரை திருப்பி அனுப்பிய சம்பவமும், அதை தொடர்ந்து விவசாயிகள், புகார் மனுவை கிழித்துப் போட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமும் அரங்கேறியது. எனினும், உதவி இயக்குனர் வள்ளலோ, `மேலிட ஆசி’ இருப்பதால் இதுபற்றி கண்டு கொள்ளாமல் இருந்தார்.
மேலும், ஆறாவது தளத்தில் உள்ள தனது அலுவலகத்திற்குள் கல்குவாரி உரிமையாளர்கள் தவிர, பத்திரிகையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட யாரையும் அனுமதிப்பதில்லை என்ற புகாரும் உள்ளது. குவாரி உரிமையாளர்கள் தந்த நிதியைக் கொண்டு தனது அலுவலகத்தில் கோமதி என்பவரை பணிக்கு அமர்த்தி, முறைகேடு புரிந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது. அதுதவிர, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் அல்லது கலெக்டர் நடத்தும் ஆய்வுக்கூட்டம் போன்ற எதிலும் வள்ளல் பங்கேற்காமல், அதிகார மமதையுடன் செயல்பட்டு வந்துள்ளார்.
சட்டத்தை மதிக்காதவருக்கு சாட்டையடி!
அதே நேரம், நேர்மையான கலெக்டர் என்று பெயரெடுத்த வினீத், கனிமவள உதவி இயக்குனர் வள்ளல் போட்டு வந்த துள்ளலை கவனித்து வந்தார். சரியான தருணத்தை எதிர்பார்த்திருந்த அவர், கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி, கனிமவளத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். எனினும், சீனியர் அமைச்சர் ஒருவரின் விசுவாசி என்ற போர்வையில் நடவடிக்கையில் இருந்து வள்ளல் தப்பினார். எனினும் கலெக்டர் வினீத் விடுவதாக இல்லை. காங்கேயம் மற்றும் தாராபுரத்தில் அனுமதித்ததை விட அதிகமாக கனிம வளம் வெட்டி எடுத்த குவாரிகளில் வருவாய்த் துறையினரை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். இதன் முடிவில் விதிமீறல் கண்டறியப்பட்டதை அடுத்து, இரண்டு குவாரிகளுக்கும் மொத்தம், 7.55 கோடி ரூபாய் அபராதம் விதித்தார் வினீத்.
இப்படி துணிச்சலுடன் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக சாட்டையை சுழற்றிய கலெக்டர் வினீத், தற்போது திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவரை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக பணிமாறுதல் செய்து, கடந்த, 16ம் தேதி, தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டார். எனினும், கலெக்டர் பொறுப்பில் இருந்து விடை பெற்றுச் செல்லும் முன்பு, கனிமவளத்துறை உதவி இயக்குனர் வள்ளல் மீது நடவடிக்கை எடுத்து, அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுச் சென்றுள்ளார்.
கொண்டாடும் விவசாயிகள்!
இதுதொடர்பாக கலெக்டர் வினீத் வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த ஆண்டு கனிம வள உதவி ஆணையர், கண்காணிப்பு அதிகாரியால் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுக்கூட்டங்களில் கே.எல்.கே. வள்ளல் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்கவில்லை. மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு புகார்கள் வந்த நிலையில், அந்த கூட்டங்களில் பங்கேற்காமல் தொடர்ந்து தவிர்த்து வந்தார். பல்வேறு புகார்களுக்கும் உரிய பதில் இல்லாத நிலையில், அவர் அந்த பணியில் இருந்து கடந்த மே 17-ம் தேதி விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக உதவி புவியியலாளர் சச்சின் ஆனந்த் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பில் இருந்து விடை பெறும் கடைசி நேரத்திலும், கனிமவளத்துறை உதவி இயக்குனர் வள்ளலை பணியிலிருந்து நீக்கிய கலெக்டரின் செயலை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர். சட்டத்தை மதிக்காத அதிகாரிக்கு, கலெக்டர் சவுக்கடி கொடுத்திருப்பதாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பெருமிதத்துடன் கூறி, இனிப்புகளை வழங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வள்ளலின் பின்னணி!

கனிம வள கொள்ளைக்கு துணை போன சர்ச்சையில் சிக்கி கே.எல்.கே. வள்ளல், மேலிட அதிகாரிகள், அமைச்சர் ஆகியோரின் ஆசியோடுதான் விதிமீறல்களில் துணிச்சலாக ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் ஆரம்பத்தில் திருப்பூரில், கனிமவளத் துறையில் உதவி புவியியலாளராகத் தான் பணிபுரிந்து வந்தார். பின்னர், சென்னைக்கு பதவி உயர்வு பெற்றுச் சென்றார்.
ஆனால், கொங்கு மண்டலத்தில் உள்ள கனிமவளங்கள் கண்முன்னே நிழலாட, அவற்றை பங்கு போட மீண்டும் ஈரோடு மாவட்டத்திற்கு பணிமாறுதல் பெற்று திரும்பினார். மேலிட செல்வாக்கால், கடந்த 2022-ம் ஆண்டில் கனிமவளத்துறை உதவி இயக்குனர் என்ற பொறுப்புடன் திருப்பூருக்கு திரும்பினார்.
எனினும், இங்கு கலெக்டராக இருந்த வினீத், இவருக்கு ஒத்துழைப்பு தராததால் அவர் மீது எரிச்சலில் இருந்த வள்ளல், மேலிடத்தில் அவர் குறித்து போட்டுத் தந்ததோடு, தன் மீது கலெக்டர் எடுக்கும் நடவடிக்கைகளில் இருந்தும் தப்பி வந்தார். இந்த நிலையில்தான், பணியிட மாறுதலில் செல்லும் முன் கலெக்டர் வினீத், வள்ளலின் துள்ளலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.






