அட்ரஸ் தரேன்… என் வீட்டுக்கு ரெய்டுக்கு வாங்க: உதயநிதி சவால்!
வருமான வரித்துறையினர் எனது சகோதரி வீட்டில் சோதனை நடத்துகின்றனர்; தைரியமிருந்தால் என் வீட்டில் வந்து நடத்தட்டும் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தலுக்கு ஒருசில நாட்களே உள்ள நிலையில், பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. மறுபுறம் முக்கியப் புள்ளிகளின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. அவ்வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரையின் இல்லத்திலும், அவரது கணவர் சபரீசன் அலுவலகம், அவரது நண்பர்களின் வீடு, அலுவலகங்களிலும் இன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
அதேபோல், கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட 4 இடங்களிலும், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் பணப் பட்டுவாடா செய்யத் திட்டமிட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, திருவண்ணாமலை திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டிலும் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஸ்டாலின் மகள் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து, உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார். உடுமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி, இன்று காலையில் என் சகோதரி செந்தாமரை வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்துள்ளது. நான் வருமானவரித்துறைக்கு மறுபடியும் இன்னொரு சவால் விடுக்கிறேன். நீங்கள் போனீர்களே. என் வீட்டு முகவரியைத் தருகிறேன். எண்.25/9, செனடாப் ரோடு, சித்தரஞ்சன் சாலை. உங்களுக்கு தைரியமிருந்தால் என் வீட்டுக்கு ரெய்டுக்கு வாருங்கள் என்றார்.
உதயநிதியின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் சமூகவலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். எப்போதும் அடுத்தவர்களை கைகாட்டி நீங்கள் தப்பித்துக் கொள்வது வாடிக்கைதானே என்றும், உங்களிடம் பணம் இருக்கும்போது நீங்கள் அழைக்காமலேயே வருமானவரித்துறை வந்து நிற்கும் என்றும் கூறியுள்ளனர்.





