அடுத்தடுத்து இரு திமுக எம்எல்ஏக்கள் மறைவு..! திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுமா?
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அடுத்தடுத்த நாட்களில் 2 திமுக எம்எல்ஏக்கள் மறைந்துள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி. சாமி 27-ந் தேதி காலை உடல் நலக்குறைவால் காலமானார். அடுத்த நாளே (28-ந் தேதி) குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் மரணம் அடைய திமுகவுக்கு பெரும் சோகமயமாகி விட்டது. குடியாத்தம் காத்தவராயன், இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி 9 மாதங்கள் தான் ஆகிறது.
இவர்களின் மறைவை அடுத்து இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 2021-ம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற சட்டப்பேரவை தோ்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு தான் இடைவெளி உள்ளது. இதனாலேயே தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக ஒரு எம்எல்ஏ அல்லது எம்.பி.பதவி இடம் மரணம், தகுதி நீக்கம் அல்லது ராஜினாமா போன்ற காரணங்களால் காலியாகும் பட்சத்தில், காலியான நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதே போல் பொதுத் தேர்தல் நடத்த 6 மாதமே உள்ளது என்றால் அந்த மாத இடைவெளிக்குள் இடைத் தேர்தல் நடத்தப்படாது.
ஆனால் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் தான் முடிவடைகிறது. கிட்டத்தட்ட 14 மாதங்கள் இடைவெளி உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தித்தான் ஆக வேண்டும். ஆனாலும் ஏதேனும் காரணங்களைக் கூறி இடைத் தேர்தலை நடத்தாமல், பொதுத் தேர்தல் வரை தள்ளிப் போடவும் வாய்ப்புகள் உள்ளன. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.





