--- --:--:-- --

இன்று வைகுண்ட ஏகாதசி.. சொர்க்கவாசல் திறப்பு..!

3

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி, ’வைகுண்ட ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. அந்த வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் கோயில்களில் ’சொர்க்கவாசல்’ எனப்படும் ‘பரமபத வாசல்’ திறக்கப்பட்டு, அந்த வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.

 

அந்த வகையில், உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, இன்று அதிகாலை 1.40 மணிக்கு ’சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது. உற்சவர்கள், ஜீயர்கள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் ஆகியோர் ஏழுமலையானை வழிபட்டு, சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர்.

 

தொடர்ந்து, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் தரிசனம் செய்தனர். பின்னர், காலை 5 மணி முதல் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதே போல, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வைணவக் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது.

 

அந்த வகையில் ’பூலோக வைகுண்டம்’ எனப் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

 

பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசல் வழியாக லட்சுமி நாராயணர் வெளியே வந்தபோது கோயில் யானை கஸ்தூரி வரவேற்றது. திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டபோது திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.

 

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதேபோல, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கங்களுடன் சாமி தரிசனம் செய்தனர். 108 வைணவ தளங்களில் ஒன்றான கடலூர் திருவந்திபுரம் தேவநாதசாமி கோயிலிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon