--- --:--:-- --

சென்னையில் இன்று திமுக பவள முப்பெரும் விழா..!

1

திமுகவின் பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில், AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி சிறப்புரையாற்ற இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

திமுக சார்பில் ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாள், திமுக உருவான நாள், பெரியார் பிறந்த நாள் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், முப்பெரும் விழாவோடு இந்த ஆண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதையொட்டி, பவள விழாவாக கொண்டாடப்படுகிறது.

 

இதன்படி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் முப்பெரும் விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த விழா ஏற்பாட்டுக்கான பணிகளை திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் விழாவைப் பார்த்து ரசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

செஞ்சி கோட்டை வடிவில் அரங்கு, திமுக கடந்து வந்த பாதைகளை விளக்கும் வண்ண பதாகைகள், 18 இடங்களில் எல்இடி திரைகள், 80,000 இருக்கைகள், 11 இடங்களில் வாகன நிறுத்தங்கள், 15 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறைகள், ஓய்வறைகள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 

மேலும், “திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய அண்ணா, 1949-ஆம் ஆண்டு இதே நாளில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றை முன்னோடிகளாகக் கொண்டு தொடங்கப்பட்ட இயக்கம்தான் திமுக.இந்த கட்சி தொடங்கப்பட்டபோது அண்ணாவுக்கு 40 வயது, கருணாநிதிக்கு 25 வயது, அன்பழகனுக்கு 27 வயது. குறைவான வயதைக் கொண்ட முன்னணி தலைவர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட திமுக, 1957-ஆம் ஆண்டு நேரடியாக தேர்தல் களத்தில் இறங்கியது.

 

கட்சி தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆன பிறகு, 1967-ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்த திமுக, முதல் முறையாக ஆட்சி அமைத்தது. அண்ணா, கருணாநிதி மறைவிற்கு பிறகு, தற்போது திமுகவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார்.” என்றார்.

Right Menu Icon