--- --:--:-- --

ஊரடங்கால் முற்றிலும் முடங்கியுள்ள திருப்பூர் பின்னலாடைத் தொழில்!

11

இந்தியாவின் மொத்த காட்டன் துணி உற்பத்தியில் 90 சதவீத உற்பத்தியை தன்னகத்தே கொண்டுள்ளது திருப்பூர் பின்னலாடை தொழில்கள். பொது முடக்க உத்தரவால் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக கூறுகிறார்கள் பின்னலாடை உற்பத்தி யாளர்கள். வருடத்திற்கு வெளிநாட்டு ஏற்றுமதி சுமார் 25 ஆயிரம் கோடி.

 

அதற்கு நிகரான அளவில் உள்ள உள்நாட்டு ஏற்றுமதியும் நடைபெறும் திருப்பூரில் பின்னலாடை தொழில் பொது முடக்க உத்தரவால் முழுவதும் முடங்கிப் போயுள்ளது. பல வருடங்களாக ஓய்வின்றி உழைத்த இயந்திரங்கள் தற்போது கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

 

விற்பனையாளர்களுக்கு சென்று சேர்ந்த பொருட்கள், கூட்ஸ் மூலம் சென்ற பொருட்கள் என ஒட்டுமொத்த முதலீட்டில் 75 விழுக்காடு அளவிற்கு பொருள்கள் தேங்கியே இருப்பதாகவும் இதனால் திருப்பூரில் பின்னலாடை தொழில் மட்டும் 7 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பை சந்தித்து உள்ளதாகவும் கூறுகிறார் உற்பத்தியாளர் ஒருவர்.

 

உற்பத்தியாளர்களின் நிலை இப்படியிருக்க வாரச் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் நிலையோ கவலைக்கிடமாக உள்ளது. நான்கு மாதங்களுக்கு முன் கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும். வங்கி கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜி‌எஸ்‌டியை முறைப்படுத்தி உற்பத்தியாளர்களுக்கு சலுகைகளை தர வேண்டும்.

 

வெளிநாட்டு ஏற்றுமதி உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை தர வேண்டும் என்கிற கோரிக்கைகளை நிறைவேற்றினால் பின்னலாடை தொழில் மீண்டு வர முடியும் என்கிறார்கள் உற்பத்தியாளர்கள்.

Leave a Reply

Right Menu Icon