--- --:--:-- --

திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 36 ஆக்சிஜன் படுக்கை உள்பட 200 படுக்கை..!

திருப்பூர்  அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 36 ஆக்சிஜன் படுக்கை உள்பட 200 படுக்கை..!

திருப்பூர், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 36 ஆக்சிஜன் படுக்கை உள்பட 200 படுக்கை  வசதிகளுடன் கொரோனா கேர் சென்டர்அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி திறந்து வைத்தனர்.

 

தமிழகத்தில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதில் கோவை மற்றும் திருப்பூரில் அதிகமாக காணப்படுகிறது. திருப்பூர் வடக்கு பகுதியில் உள்ள அனுப்பர்பாளையம்,15வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி, பெரியாயிபாளையம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் அலைந்து கொண்டிருப்பது மட்டுமில்லாமல் ஆக்சிஜன் கிடைக்காமல் அவதிப்பட்டுவருகின்றனர்.

 

இவ்வாறு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அரசுடன் இணைந்து அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கோவிட் கேர் சென்டர் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து அனுப்பர்பாளையம் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் பரணி பெட்ரோல் பங்க் உரிமையாளர் நடராஜன் தலைமையில், பள்ளி வளர்ச்சிக் குழு செயலாளர் சிட்டி வெங்கடாச்சலம், அக்ஷ்யா டிரஸ்ட் செயலாளர் சுப்ரீம் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் அக்ஷ்யா டிரஸ்ட் உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவதுடன், அவர்களது விலைமதிப்பற்ற உயிரும், வாழ்வும் காப்பாற்றப்படும் என்ற அடிப்படையில் கோவிட் 19 கொரோனா கேர் சென்டர் திறக்க முடிவு செய்தனர்.

 

இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி, அக்ஷயா டிரஸ்ட் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் திருப்பூர் கிளை ஆகிய மூன்றும் இணைந்து இதன் திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு 15 வேலம்பாளையத்தில் உள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

 

சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆண்களுக்கான வெளி நோயாளிக்கான சிகிச்சை பிரிவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெண்களுக்கான வெளி நோயாளிக்கான சிகிச்சை பிரிவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.சுப்புராயன் மினி ஐ.சி.யூ. தீவிர சிகிச்சை பிரிவையும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.செல்வராஜ் ஆண் களுக்கான ஆக்சிஜன் அறையையும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் பெண்களுக்கான ஆக்சிஜன் அறையையும், மாவட்ட வருவாய் துறை அலுவலர் ஜி.சரவணமூர்த்தி ஆண்களுக்கான மற்றொரு ஆக்சிஜன் அறையையும் திறந்து வைத்தனர். திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கே.சிவகுமார் ஆக்சிஜன் செறிவூட்டும் அறையையும், முதியோர் பிரிவை நாகராஜூம், குழந்தைகள் பிரிவை நவீன் சக்காரியாவும், ஆண்களுக்கான பொதுப்பிரிவை இந்திய மருத்துவ சங்கத்தின் துணை தலைவர் சி.என். ராஜா, பெண்களுக்கான பொதுப்பிரிவை இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் செந்தில்குமார் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தனர்.

கொரோனா கேர் சென்டர் குறித்து அனுப்பர்பாளையம் பள்ளி வளர்ச்சி குழு தலைவரும், அக்ஷயா டிரஸ்ட் தலைவரும், பரணி பெட்ரோல் பங்க் உரிமையாளருமான எம். நடராஜ் தலைமையில், பள்ளி வளர்ச்சிக் குழு செயலாளர் சிட்டி வெங்கடாச்சலம், அக்ஷ்யா டிரஸ்ட் செயலாளர் சுப்ரீம் செல்வராஜ் ஆகியோர் கூறியதாவது : இந்த கொரோனா கேர் சென்டரில், அனைத்து வசதிகளுடன் கூடிய 200 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படுள்ளது. இதற்காக அரசு பள்ளியை போர்க்கால அடிப்படையில் சரி செய்யும் வேலைநடந்தது. பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் புதிய எலக்ட்ரிக் கனெக்சன், ஃபேன் மற்றும் லைட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சொந்தமாக ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கப்பட்டு ஐந்து அறைகளில் சிகிச்சை பெறக்கூடிய வகையில் சுமார் 36 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் குழாய் பதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்புடன் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் நடமாடும் ஆக்சிசன் செரிவூட்டும் 10 கருவிகளும் தயார் நிலையில் உள்ளது.

 

அதேபோல், அனைத்து அறைகளுக்கும் தண்ணீர் குழாய்கள் அனைத்து தளங்களுக்கும் வாஷ்பேஷன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொருத்தப் பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் நோயாளிகளுக்காக 15 நிரந்தர கழிவறைகளும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இத்துடன், நோயாளிகள் குளிப்பதற்காக சுடுதண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

ஆக்சிசன் படுக்கையில் சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகள் சிரமப்படக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு அறைக்கும் வெளியே மொபைல் டாய்லெட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பள்ளி வளாகத்தில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் இருக்கின்ற காரணத்தினால் நோயாளிகளும் அவரது உறவினர்களையும் ஒன்றுகூடுவதை தடுக்கும் பொருட்டு 600 அடி நீளம் 6 அடி உயரம் கொண்ட டைமண்ட் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

திறமையான சமையல் கலைஞர்களை கொண்டு பாதுகாப்பான முறையில் செட் அமைக்கப்பட்டு மூன்று வேலையும் உணவு தயார் செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது. நோயாளி களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய வகையிலே இரண்டு வேலை அசைவ உணவும், ஒருவேளை சைவ உணவும், சுண்டல் மற்றும் சூப் வகைகளும் வழங்கப்பட உள்ளது. இதுபோக மருத்துவர்கள் வசதி, செவிலியர்கள் வசதி, களப்பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பனியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த உன்னத மக்கள் சேவையில் சேவை மனம் கொண்ட நல் உள்ளங்கள் அனைவரும் ஒன்று கூடுயுள்ளோம். இந்தக் கொரோணா என்கிற அரக்கனை கொன்று குவிப்போம், என்பதன் அடிப்படையில் நீங்களும் இணையலாம், திட்ட மதிப்பு அதிகம் என்பதால் உதவிகள் வரவேற்கப்படுகின்றன. அதை நீங்கள், பணமாக, பொருளாக அல்லது வேறு விதத்தில் உதவலாம், விருப்பம் உள்ள நல் உள்ளங்கள் கீழ்க்கண்ட அக்ஷ்யா டிரஸ்ட் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பலாம் மற்றும் செக்கோ அல்லது டிடி எடுத்து நீங்களே அனுப்பர்பாளையம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருக்கக் கூடிய அலுவலகத்தில் நேரடியாக வந்து வழங்கலாம், மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழ்க்கண்ட 96296 82999, 98946 14706, 80125 52255 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். என்று கூறினர்.

Leave a Reply

Right Menu Icon