திருச்செந்தூர் குடமுழுக்கு.. ஜூலை 4 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கையொட்டி, அடுத்த மாதம் 4 ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் 7ஆம் தேதி நடைபெறும் நிலையில், பல ஊர்களிலும் இருந்து சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி, அடுத்த மாதம் 4ஆம் தேதி முதல் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
குடமுழுக்கு விழாவையொட்டி திருச்செந்தூரில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்றும், அங்கிருந்து திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லும் வகையில் 30 கட்டணமில்லாப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் சிவசங்கர் கூறியுள்ளார்.
இதுதவிர சென்னை, திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாகப் பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ள சிவசங்கர், பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிரக்கும் வகையில் முன்பதிவு செய்து பயணிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.





