உதிரிபாகக் கடையில் வெடித்துச் சிதறிய டயர்கள்..!
கோவை, காட்டூர், பட்டேல் ரோடு, பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்து உள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் விற்பனை கடையில், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கடைக்குள் இருந்த ஆயில் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் தீப்பிடித்ததால், சில நிமிடங்களிலேயே தீ மள மளவென எரியத் தொடங்கியது.
உதிரிபாகக் கடைக்கு மிக அருகிலேயே குடியிருப்புகள் நெருக்கமாக அமைந்துள்ளதால், தீயானது அடுத்தடுத்த வீடுகளுக்கும் வேகமாகப் பற்றிப் பரவத் தொடங்கியதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இருப்பினும், குறுகலான வீதிகள் மற்றும் கொழுந்து விட்டு எரியும் தீயினால், தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைவதில் பெரும் சவால்கள் ஏற்பட்டன.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அப்பகுதி பொதுமக்களும் போலீசாருடன் கைகோர்த்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உதிரிபாகக் கடையில் ஏற்பட்ட இந்த விபத்திற்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் கவனக்குறைவா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரக் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.தொடர்ந்து தீயணைப்புப் படையினர் கடும் போராட்டத்திற்கு மத்தியில் தீயை அணைக்க முற்பட்டு வருவதால், காட்டூர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.
இந்த தீ விபத்து குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை காவல்துறையினர் தகாத வார்த்தையில் திட்டி அவரகளை தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை காட்டூரில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கை வைத்து தள்ளியதாகவும், தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து நடந்த இடத்தில், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்கள் வழக்கம்போல் வீடியோ பதிவு மற்றும் தகவல் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சில காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்களை தடுத்துள்ளனர். இதற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், காவல்துறையினர் பத்திரிகையாளர்களை கை வைத்து தள்ளியதுடன், தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.





