திருப்பரங்குன்றம் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
வழக்கத்திற்கு மாறாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், தீபம் ஏற்றலாம் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். அதற்கு எதிராக தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. இதேபோன்று மனுதாரர் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவை நிறுத்தி வைக்க கோரி ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசுத் தரப்பு வாதிட்டது. அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும், தனி நீதிபதி சுவாமிநாதன் மோதல் காட்சிகளை பார்த்தாரா என தெரியவில்லை எனவும் அரசு தரப்பில் முறையிடப்பட்டது. காவல் துறைக்கு இணையாக சி.ஐ.எஸ்.எப். படையினர் செயல்பட முடியாது என்றும் தமிழ்நாடு அரசு கூறியது.
கோயில் நிர்வாகத்தை தவிர்த்துவிட்டு மனுதாரர் தீபம் ஏற்ற செல்வதை ஏற்க முடியாது என்றும் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் இல்லை, வெளிச்சம் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தூண் என்றும் தர்கா தரப்பு வாதிட்டது. மேலும், 100 ஆண்டுகளாக தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை என்பதை நீதிபதி சுவாமிநாதனே ஏற்றுக்கொண்டார் என்றும் அறநிலையத்துறை சுட்டிக்காட்டியது.





