அன்புமணிக்கும் எனக்கும் எவ்வித மனக்கசப்பும் இல்லை – பாமக நிறுவனர் ராமதாஸ்
கடந்த மே 11ஆம் தேதி பாமக சார்பில் ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாடை அடுத்து, தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் கூட்டம் கடந்த மே 15,16ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. மேலும் அன்புமணி ராமதாஸும் கலந்து கொள்ளாததால், அப்பா – மகன் இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “அன்புமணிக்கும் தனக்கும் எவ்வித மனக்கசப்பு இல்லை. வரும் நாட்களில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பார்.கசப்பான செய்தியை என்றும் நான் சொல்வது இல்லை. இனிப்பான செய்தியை மட்டும் தான் சொல்வேன். அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கப்போவதாக சிலர் கூறுகிறார்கள்.
பாமக நான் உருவாக்கிய கட்சி. அன்புமணியை நானே கட்சியிலிருந்து நீக்குவேனா?இந்திய அளவில் சமூக நீதியை பேசுவது நான் ஒருவன் தான். நான் மட்டும் தான் அதை பேச முடியும். என்னை விட்டால் வேறு யாரும் பேச முடியாது. மற்றவர்களுக்கு அதை பற்றி தெரியாது. சிங்கத்தின் கால்கள் பழுதுபடவில்லை.
சீற்றமும் குறையவில்லை என நிரூபிக்கவே நீச்சல் அடித்தேன்” என கூறினார்.முன்னதாக தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, “பாமக எந்த வகையிலும் நிலை குலையாது என்றும் விரைவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசும், அக்கட்சியின் நிறுவனர் ராமதாசும் சந்தித்து நல்ல முடிவை அறிவிப்பார்கள்” என்றார்.





