காதலிப்பது போல் நடித்து 60 சவரன் நகைகளை கொள்ளையடித்த இளைஞர்..!
மதுரையில் காதலிப்பது போல் நடித்து இளைஞர் ஒருவர் 60 சவரன் நகைகளை திருடிச் சென்றதாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். மதுரையைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் சதீஷ்குமாருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். மேலும் சிறுமி தனது காதலனுக்கு வீட்டில் இருந்து 60 சவரன் நகைகளை கொடுத்ததாக தெரிகிறது. அதன் மூலம் கிடைக்கப் பெற்ற பணத்தை கொண்டு காதல் ஜோடிகள் இருவரும் ஊர் சுற்றி வந்துள்ளனர்.
இதற்கிடையே வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் சதீஷ் குமார் என்பவர் தனது மகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் 18 லட்சம் ரூபாய் மதிப்பில் 60 சவரன் நகைகளை மிரட்டி வாங்கியதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.





