சென்னையில் கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்று தொடங்குகிறது..!
சென்னை அருகே உள்ள எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்று தொடங்குகிறது.
கொரொனா பாதிப்பை தடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனமும் இணைந்து கோவாக்ஸின் என்ற பெயரிலான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து. இதனை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதித்தது.
நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமிழகத்தில் புதிய தடுப்பு மருந்தை பரிசோதனைக்காக காட்டாங்கொளத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அங்கு கடந்த ஜூலை 23ஆம் தேதி 30 தன்னார்வலர்களை கொண்ட முதல் கட்டமாகவும், 50 தன்னார்வலர்களை கொண்டு இரண்டாம் கட்டமாகவும் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனைகளிலும் கோவாக்ஸின் நல்ல பலனை அளித்த நிலையில் இதன் தொடர்ச்சியாக இன்று முதல் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்குகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதலின்படி இந்த ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.






