ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது – முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதேசமயம், இந்த விவகாரத்தில் முதலமைச்சருடன் கட்சியின் தேசிய தலைமை பேசி முடிவெடுக்கும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், இந்தமுறை “ஆட்சியில் பங்கு வேண்டும்” என தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். இது திமுகவை அதிருப்தி அடைய செய்ததாக கூறப்பட்டது. அதேசமயம், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்க 70 நாட்களாக காத்திருப்பதாக காங்கிரஸ் தெரிவித்த நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வரும் 22ஆம் தேதி ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்தது திமுக.
இதனைத் தொடர்ந்து, ஆட்சியில் பங்கு கோரிக்கை விவகாரத்திற்கும் திமுக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. சென்னையில் தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கை தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இது காங்கிரஸிற்கும் நன்றாக தெரியும் என்று முதலமைச்சர் கூறினார்.
காங்கிரஸ் உடனான கூட்டணி வலுவாக இருப்பதாகவும், அதில் பிளவை ஏற்படுத்த, சிலர் இது போன்ற கருத்துகள் மூலம் சதி திட்டம் தீட்டுவதாகவும் அவர் விமர்சித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அரசியலை கடந்து தனக்கு ஒரு சகோதரர் என்றும், தனது குடும்பத்தில் ஒருவராகவே அவரை பார்ப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். கடந்த 2021 தேர்தலை விட இம்முறை திமுக அமோக வெற்றி பெறும் என்றும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில் ஆட்சியில் பங்கு குறித்து இரு கட்சிகளின் தலைமையும் கூடி முடிவு செய்யும் என பதில் அளித்திருக்கிறார் செல்வப்பெருந்தகை. கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சியின் ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூரும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பதில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுப்பதை தேசிய தலைமை பார்த்துக்கொள்ளும் என நியூஸ் 18க்கு அளித்த நேர்காணலில் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். ஆட்சியில் பங்கு விவகாரம், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தாது என இரு தரப்பிலிருந்து கூறி வந்தாலும், அது சற்று உரசலை ஏற்படுத்தவே செய்திருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.






