மீண்டும் மீண்டும் உயரும் தங்கத்தின் விலை…!
புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வருகிறது. நாளுக்கு நாள் சிறுக சிறுக உயர்ந்துவந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதில் புதிய உச்சமாக தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.15,000ஐ கடந்துள்ளது.
தங்கத்தின் விலை இப்படி ராக்கெட் வேகத்தில் உயர சில முக்கியமான உலகளாவிய காரணங்கள் உள்ளன. ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் நேற்று (27.01.2026) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.14,960க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று (28.01.2026) காலை மீண்டும் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து நகைப் பிரியர்களை அதிர்ச்சியடையச் செய்தது. அதன்படி 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.370 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,330க்கும், சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,22,640க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் (28.01.2026) மாலை வேளையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்து ரூ.1,24,880க்கும், கிராமுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.15,610க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அந்தவகையில், தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.1,920 உயர்ந்து ரூ.1,04,200க்கும், கிராமுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.13.025க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.400க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.4,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






