அரசு அமைதி காத்தால் நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும்
தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து அமைதி காத்தால் நாடே திரும்பி பார்க்கும் வகையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் அதிமுக அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு வருவதன் உள்நோக்கம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்கான அடிப்படை என்பதை மறைக்கும் முயற்சியில் முதலமைச்சரும், வருவாய்த் துறை அமைச்சரும் செயல்படுகின்றனர் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளா, அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்க்கும்போது தமிழக அரசு கண்ணை மூடிக் கொண்டு வழிவிடுவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஸ்டாலின் அதிமுக அரசு தொடர்ந்து அமைதி காத்தால் நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் ஜனநாயக ரீதியிலான மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.





