திருப்பூர், திருமுருகன் பள்ளியில் நடக்கும் சாரண – சாரணியர் முகாமில் 540 மாணவர்கள் பங்கேற்பு
திருப்பூர் கல்வி மாவட்ட அளவிலான 3நாட் கள் சாரண – சாரணியர் முகாம் திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் செயல்பட்டு வரும் திருமுருகன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது. சாரணியருக்கான தொடக்க விழா சாரண மாணவிகளின் சாரண கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாரணியருக்கான முகாமில் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 30 பள்ளிகளை சேர்ந்த 195 சாரணியர்கள் கலந்து கொண்டனர்.
முகாமிற்கு திருமுருகன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுதாமோகன் தலைமை தாங்கினார். சாரண சாரணிய திருப்பூர் மாவட்ட தலைமையக ஆணையர் ஜான் சாமுவேல், மாவட்ட அமைப்பு ஆணையர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆணையர் அகிலாண்டேஸ்வரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது. நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது சாரண இயக்கத்தில் இருந்தேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த சாரண முகாமில் மாணவிகள் தங்களது ஆற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில் சிறப்பாக பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். 1969 ஆம் ஆண்டு அமெரிக்கா நாசா விண்வெளி நிலையத்தில் இருந்து அப்போலோ 11 என்ற விண்கலம் பைலட் பஷ் ஆல்ட்ரின், நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகிய 2 வீரர்களுடன் சென்றது. பைலட் பஷ் ஆல்ட்ரின் நிலாவில் இறங்கினால் இறந்து விடுவோமோ என்ற பயத்தினால் இறங்க தயங்க, அந்த 4 வினாடி இடைவெளியில் நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி எடுத்து வைத்து நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் என்ற உலக புகழை அடைந்துள்ளார்.
அதேபோல் இந்த முகாமை பயன்படுத்தி மாணவிகள் நாளை எதை செய்யவேண்டும் என்று முடிவு பண்ணி, எதை பற்றியும் கவலைப்படாமல் அதைமுடிக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அடுத்து பெற்றோர்கள். இவர்கள் தங்களை வருத்திக்கொண்டு எந்த எதிர்பார்ப்பு இல்லாமல், தங்கள் பிள்ளைகளின் நலனை மனதில் கொண்டு உழைத்து வருகிறார்கள் அவர்களை என்றென்றும் மறக்காமல் பிற்காலத்தில் அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். என்றார். முடிவில் சாரண ஆசிரியை உமா நன்றி கூறினார்.

முகாமில் சாரண பயிற்சியாளர்கள் நாச்சியார், அம்புஜம் கொண்ட குழுவினர் காலை 6 மணிமுதல் மாணவிகளுக்கு ஓட்டப்பயிற்சி, ஜாக்கிங் பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி ஆகியவற்றையும், கயிறுகள் மூலம் போடப்படும் பல்வேறு முடிச்சுகளும் அதனால் என்ன பயன் ? ., முதலுதவி செய்தல், திசை பார்க்கும் கருவிகள் கொண்டு திசை அறிதல், உயரம், நீளங்களை அளத்தல் போன்ற பயிற்சிகளை செயல்விளக்கத்துடன் சொல்லிக்கொடுத்தனர்.
அதேபோல் சாரணருக்கான முகாம் அதே பகுதியில் உள்ள திருமுருகன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் 50 பள்ளிகளை சேர்ந்த 345 சாரணர்கள் கலந்து கொண்டு பயிற்சியாளர் சின்னசாமி தலைமையில் பயிற்சி பெற்றனர். முகாம் இன்று காலை கூடாரம் அமைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி மதியத்துடன் நிறைவு பெறுகிறது





