காங்கிரஸூக்கு திமுக விதித்த கெடு இன்றுடன் நிறைவு!
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்ய காங்கிரசுக்கு இன்றே கடைசி நாள் என திமுக கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை கூடுதல் இடங்களை அக்கட்சி கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த முறை போன்றே, வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 25 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் காங்கிரசுக்கு இதைவிடக் கூடுதல் இடங்களைத் தர முடியாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. திமுகவின் இந்த முடிவை காங்கிரஸ் ஏற்க மறுத்து வருவதால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
35 இடங்கள் கிடைக்காவிட்டால், கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்தும் காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. கூட்டணிப் பேச்சுவார்த்தையை இனியும் நீட்டிக்க விரும்பாத திமுக, தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்ய காங்கிரசுக்கு கெடு விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.






