பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த மத்திய அரசின் பாராட்டு..!
புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு மேம்படுத்தியுள்ளதாக மத்திய பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
நாட்டின் உற்பத்தித் துறையில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் 40% பங்கு வகிக்கின்றன என்றும் அதிநவீன தொழில்நுட்பம், ஐடி, நிதி போன்ற துறைகளின் வளர்ச்சி தென் மாநிலங்களில் அதிகளவில் உள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும், நாட்டின் உற்பத்தித் துறையில் அதிகபட்சமாக 15% ஊழியர்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஆலை தொழிலாளர்களில் 60% பேர் தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் உள்ளதாகவும் நாட்டில் பெரும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள முதல் 8 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் வேலைவாய்ப்பைப் பெருக்கும் திட்டங்களைத் தீட்ட தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளதாகவும் மத்திய அரசு பாராட்டியுள்ளது.
பெண்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கி வேலைவாய்ப்பைப் பெருக்க நினைக்கும் மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசின் தோழி விடுதி திட்டம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.





