--- --:--:-- --

பிறந்து 7 நாளில் இறந்த பெண் குழந்தை! அம்பலமான பாட்டியின் சதி!

13

திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்றாவதாக பிறந்த குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் அந்த குழந்தைக்கு எலி மருந்தை கலந்து கொடுத்து கொலை செய்திருக்கிறார் பாட்டி. 25 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1994 ஆம் ஆண்டு வெளிவந்த கருத்தம்மா திரைப்படத்தில் தான் தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் காட்சிகள் முதன்முதலாக பதிவு செய்யப்பட்டன.

 

தமிழக அரசின் தொட்டில் குழந்தைகள் திட்டத்திற்கு வித்திட்ட இந்த காட்சிகள் இன்றும் நடந்து வருகின்றன என்றால் நம்ப முடிகிறதா? விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான வரதராஜ் என்ற இளைஞர் தனது முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்த தான் வேதனையடைந்தார் பச்சிளம் குழந்தையை கொன்று தென்பெண்ணை ஆற்றங்கரையில் புதைத்த கொடூரம் சமீபத்தில் நடந்தது.

 

இப்போது மீண்டும் ஒரு சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் டேங்க் தெருவைச் சேர்ந்தவர்கள் நடராஜன் – குப்பு தம்பதி இவர்களது மூத்த மகன் நாகராஜ்.

 

கூலித் தொழிலாளியான நாகராஜின் மனைவி ராணி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து ஏழாம் நாள் அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி குழந்தை திடீரென பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளது.

 

பயந்துபோன ராணி குழந்தையை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் விஷம் கலந்தால் குழந்தை இறந்ததாக தெரிவித்துள்ளனர்.சந்தேக மரணம் என்ற பிரிவில் தண்டராம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்துள்ளது.

 

அதில் குழந்தையின் உடலில் எலி மருந்து கலந்ததால் மரணம் ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் 85 வயதான பாட்டி குப்புதான் குழந்தையை எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்தது அம்பலமானது.

 

ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளதே என வேதனை அடைந்த குப்பு குழந்தையின் பெற்றோருக்கு தெரியாமல் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார் மூதாட்டி குப்புவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனைகளை நிகழ்த்தி வரும் 21ஆம் நூற்றாண்டில் பெண் குழந்தையை ஒரு மூதாட்டியே விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon