--- --:--:-- --

கொரோனா பாதிப்பு கோடை வியாபரத்தை தொலைத்த மண்பாண்ட  கலைஞர்கள் !

IMG-20200429-WA0186

கோடையில் காலத்தில் பானை, குடி தண்ணீர் ஜக்கு என்று அதிக வியாபாரம் இருக்கும்.  இந்த முறை எல்லாத்தையும் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக   மானாமதுரை மண்பாண்ட கலைஞர்கள் தொழில் கடுமையாக பாதிப்புகுள்ளாகியுள்ளது.

 

வைகை நதி பாய்வதால் மானாமதுரை மக்களுக்கு மண்பாண்ட தொழிலும் ஒரு அடையாளமாக விளங்குகிறது”. கார்த்திகை சுட்டி முதல் மண் கடம் வரை தயார் செய்து அசத்துகின்றனர்., சிவகங்கை மாவட்ட மானாமதுரை  குலாலர் தெருவில் 50க்கும் மேற்பட்ட மண்பாண்ட கலைஞர்கள் நேடியாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைத்து வருகின்றனர். ஆண்டுதோறும் கோடை காலத்தில் பானை, குடிநீர் ஜாடிகளை அதிகளவு விற்பனை அமோகமாக இருக்கும்.  இந்தாண்டு கொரோனா பாதிப்பால் வியாபாரம் முழுமையாக பாதிக்கப் பட்டிருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

 

இது குறித்து மாற்றுத்திறனாளி மண்பாண்ட கலைஞர் பாண்டி கூறுகையில், ” எங்கள் குடும்பம் மானமதுரையில் நான்கு தலைமுறையாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம்.  சிறுவனாக இருக்கும் போதே மண்பாண்ட தொழிலை ஆர்வத்தில் கற்றுக்கொண்டேன்.  எனது இடது கை மட்டும் பாதி தான் இருக்கும். பிறவியிலேயே அப்படி தான். அதனால் தொழில் செய்வதில் பெருசா எனக்கு கஷ்டம் தெரியாது. சீசனுக்கு ஏற்றவாரு மண்பாண்ட பொருட்கள் செய்கிறோம். அப்பாவும், அண்ணனும் இதே தொழிலை தான் செய்கின்றனர்.

சாமி சிலைகள், விளக்குகள், புரவி, பொம்மை, அடுப்பு, முளைப்பாரி சட்டி, உண்டியல், பானை, ஊறுகாய் ஜாடி என்று எல்லா பொருட்களும் செய்கிறோம். கஷ்டமர் ஆர்டர் கொடுத்தால் அவர்களுக்கு விரும்பிய பொருட்களும் செய்துகொடுப்போம். அதிகாலை 3 மணிக்கே வேலைக்கு வந்துவிடுவோம்.

 

எனது அப்பா  மண்ணு குழைக்க சரியா இருக்கும். வெயிலுக்கு முன்னவே தயார் செய்துட்டா கலைப்பு தெரியாது. கணிமண், குறுமணல் உள்ளிட்ட மூலப் பொருட்கள் தான் சேர்ப்போம். அதனால சுகாதார கேடு இருக்காது. இந்த மாதிரி தரமான மண்பாண்ட பொருட்கள் நாங்க செய்துவருகிறோம். ஆண்டுதோறும் கோடைகாலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதல், மண்பானை வியாபாரம் சூடு பறக்கும். குட்டிப்பானை, பெரிய பானை, தண்ணீர் ஜக்கு, குட்டி மண் கேண் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக போகும். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தொழில் முழுமையா முடங்கி போச்சு. என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறோம்.

 

ஆண்டுதோறும் மழை நிவாரணம் நிதி 5 ஆயிரம் அரசு கொடுக்கும் அந்த பணம் மழை காலம் முடிந்தும் கிடைக்கவில்லை எனவே அரசு அதனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார். மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு தொழிற்சங்க தலைவர் லெட்சுமண் கூறுகையில்,” மண்பாண்ட பொருட்களை வடிவமாக கொண்டுவந்து விற்பனை செய்யும்வரை. தாயின் வயிற்றில் குழந்தை   போலத்தான். மிகவும் பக்குவமாக பாதுகாக்க வேண்டும். இப்படி தான் ஒவ்வொரு பொருளையும் பார்த்து, பார்த்து செய்கிறோம். குறைந்த வருமானம் என்றாலும் எங்களுக்கு மனநிறைவான தொழிலை செய்கிறோம். இப்படியான சூழலில் கொரோனா எங்களின்  வாழ்வாதாரத்தை சீரழித்து விட்டது.

 

ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் எங்களுக்கு ஆண்டுதோறும் 5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்குவதாக அறிவித்து வழங்கினார். இந்நிலையில் இந்தாண்டு சட்ட சபையில் அது தொடர்பாக பேச்சு எடுத்த போது கொரோனா பிரச்னை உருவெடுத்தால் அது கைவிடப்பட்டுள்ளது. எனவே அந்த தொகையை அரசு எங்களுக்கு வழங்கி எங்களுடைய வாழ்வாதரத்தை காப்பாற்ற வேண்டும்” என்றார்.

Leave a Reply

Right Menu Icon