இன்று இந்தியாவின் 53வது தலைமை நீதிபதி பதவியேற்பு..!
நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சூர்யகாந்த் இன்று பதவியேற்கிறார். ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில் பிரேசில் உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த தலைமை நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்திய நீதித்துறை வரலாற்றில் இவ்வளவு பெரிய சர்வதேச நீதித்துறை குழு தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பூட்டான், கென்யா, மலேசியா, மொரீஷியஸ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைமை நீதிபதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.
தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 23 அன்று முடிவடைந்தது. அவருக்குப் பிறகு, நீதிபதி சூர்யகாந்த் இப்போது இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். நீதிபதி சூர்யகாந்த் பிப்ரவரி 9, 2027 அன்று ஓய்வு பெறுவார். மேலும் அவரது பதவிக்காலம் தோராயமாக 14 மாதங்கள் இருக்கும். இந்தியாவின் 53 வது தலைமை நீதிபதி என்ற பெருமையை பெற்றார் சூர்யகந்த்.
பிப்ரவரி 10, 1962 இல் பிறந்த சூர்யகாந்தின் தந்தை மதன்கோபால் சாஸ்திரி ஒரு சமஸ்கிருத ஆசிரியராகவும். அவரது தாயார் சஷி தேவி ஒரு இல்லத்தரசியாகவும் இருந்தார். ஐந்து உடன்பிறப்புகளில் இளையவரான சூர்யகாந்த் சிறு வயதிலிருந்தே புத்திசாலியாகவும் கடின உழைப்பாளியாகவும் இருந்தார். இளம் வயத்தில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டார்.
சூர்யகாந்த் 1984 ஆம் ஆண்டு ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் தனது எல்எல்பி பட்டத்தை முடித்தார். அதே ஆண்டு, அவர் ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சி செய்யத் தொடங்கினார். ஒரு வருடம் கழித்து, 1985 ஆம் ஆண்டு, சிறந்த வாய்ப்புகளைத் தேடி சண்டிகருக்குச் சென்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடர்ந்தார். நீதித்துறை சேவையில் பணியாற்றும் போது, 2011 ஆம் ஆண்டு குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.





