“வேட்டையன்” என பெயர் சூட்டிய தாளவாடி பொதுமக்கள்..!
தாளவாடி பகுதியில் கரும்பு லாரிகளை குறிவைத்து வேட்டையாடி வந்த ஒற்றை காட்டு யானைக்கு வேட்டையன் என பெயர் சூட்டிய தாளவாடி பொதுமக்கள். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.
யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீருக்காக வனச்சாலையை கடந்து செல்வது வழக்கம். சில நேரங்களில் யானைகள் சாலையோரமாக உள்ள செடி, கொடி வகைகளை தின்றபடி அங்கேயே நடமாடும். சமீப காலமாக ஒற்றை காட்டு யானை தாளவாடி அருகே முகாமிட்டு அந்த வழியாக வரும் கரும்பு லாரிகளை குறிவைத்து ஏதாவது உள்ளதா எனத் தேடி வேட்டையாடி வந்தது.
தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் கும்டாபுரம் அருகே கடந்த சில வாரங்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஒற்றை காட்டு யானை சாலையில் உலா வந்து கொண்டுள்ளது . அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி கரும்பு உள்ளதா என தேடுவது தொடர் கதையாக மாறிவிட்டது.
இதைக் கண்டு அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை சற்று தூரத்திலேயே நிறுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் நேற்றைய முன்தினம் இரவு திடீரென கும்டாபுரம் ஊருக்குள் நுழைந்து ஸ்ரீ பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை அலுவலகம் அருகே கரும்பு லாரிகளை தேடியவாறு அலைமோதியது.
இதைக்கண்டு அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 2 மணி நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர். தாளவாடி பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து கரும்பு லாரிகளை குறிவைத்து வேட்டையாடி வரும் வேட்டையன் ஒற்றைக் காட்டுயானையை பிடித்து வேறு பகுதிக்கு மாற்ற வேண்டுமென வனத்துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






