காய்ச்சல், இருமல் 5 நாட்கள் இருந்தால் சோதனை அவசியம்..!
தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஓமிக்ரான் என்பது சாதாரணமானது என்று பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது ஓமிக்ரான் பாதிப்பு மிக சாதாரணமானது என்ற பொது கருத்து மக்களிடையே இருப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தொடர் காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனையில் உடனடியாக சோதனை செய்ய வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
அடுத்த இரண்டு வாரங்கள் ஓமிக்ரான் பரவல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.






