அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் பயங்கரவாதிக்கு 5 ஆண்டு சிறை
2011-ஆம் ஆண்டு பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொண்டபோது, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி ஓடைப் பாலம் பகுதியில், பைப் வெடிகுண்டுகளை வைத்து தாக்கத் திட்டமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய தென்காசியைச் சேர்ந்த முகமது ஹனிபா, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பதுங்கியிருந்தார். அவரை 2013-ல் கைது செய்ய முயன்ற சிறப்பு விசாரணை குழுவின் டி.எஸ்.பியை கத்தியால் தாக்கி கொல்ல முயன்றதாகவும் அவர்மீது மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றம் முகமது ஹனிபாவை விடுதலை செய்தது. இதை அரசு தரப்பில் எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, குற்றவாளி முகமது ஹனிபாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.






