ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 3 முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இன்றைய அமர்வில் இயற்கை வளங்கள், தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளன.
சட்டப்பேரவை இன்று கூடியவுடன் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கர்நாடகாவில் 3 தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விளக்க வேண்டுமென கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆசிரியர்கள் தொடர்பான அரசின் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அதில், “ஆசிரியர் பணி சமூகத்தின் எதிர்காலத்தை செதுக்கும் உயரிய பொறுப்பாகும். மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்தல், தனித்துவ திறமைகளை கண்டறிதல், ஊக்கப்படுத்துதல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாய பணி. இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்ய ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தால் தகுதி தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் 3 லட்சத்து 28 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆசிரியர் தகுதி தேர்வு எனப்படும் டெட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது. பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு தேவை.
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பணியில் உள்ள ஆசிரியர்கள் நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது. 15 முதல் 20 வருடங்கள் வரை பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை தகுதித்தேர்வு எழுதச் சொல்லுவது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்யும்.
2010க்கு முன்பாக அன்றைய விதிமுறைகளின் முன்னிலையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் முன்மொழியப்படுகிறது. பதவி உயர்வு மற்றும் பணிப்பலன்கள் தொடர்ந்து கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தும் வகையில் தீர்மானம் முன்மொழியப்படுகிறது” என்று கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




