--- --:--:-- --

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழக விவசாய சங்கம் ஆதரவு..!

3

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்ட திருத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். திருச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

இதனையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். கரூரில் விவசாய சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்திய தொழிற்சங்க மையம் சார்பாக ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் பிரதமருக்கு காகித ராக்கெட் விடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

 

ராக்கெட்டுகளில் தங்கள் கோரிக்கைகளை அவர் குறிப்பிட்டு எழுதி இருந்தனர். கடலூர் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் ஏராளமானோர் முற்றுகையிட்டனர். அப்போது வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

 

பின்னர் அனைவரும் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அருப்புக்கோட்டை, இராஜபாளையம், பழனி, நெல்லை, மேலூர் ஆகிய இடங்களில் பேரணியாக சென்று வங்கிகளை கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

Leave a Reply

Right Menu Icon