காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும்..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இது தற்போது கன்னியாகுமரிக்கு கிழக்கில் ஆயிரத்து 40 கிலோமீட்டர் தூரத்திலும், திரிகோணமலையில் இருந்து தென்கிழக்கில் 640 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று இன்று புயலாக மாறும் என்றும் அதற்கு புரெவி என பெயரிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் நாளை மாலை அல்லது இரவில் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று டெல்டா மாவட்டங்களிலும் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.







