ஆன்லைனில் கல்வி கற்க செல்போன் இல்லாததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை..!
ஆன்லைனில் கல்வி கற்பதற்கு செல்போன் இல்லாத விரக்தியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ராமாபுரம், ஏழுமலை நாயக்கர் தெருவைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகள் யாமினி பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரொனா ஊரடங்கால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வந்தன.
ஆனால் கொத்தனார் வேலை செய்யும் சின்னையன் வீட்டில் யாரும் இல்லை படிப்பதற்கு செல்போன் வசதி இல்லை. இதனால் தனது சித்தியின் செல்போனில் யாமினி அவ்வப்போது வகுப்புகளை கவனித்து வந்தார்.
இந்நிலையில் அனைத்து வகுப்புகளையும் ஆன்லைனில் தவற விடாமல் படிப்பதற்கு தனியாக செல்போன் வாங்கித் தருமாறு யாமினியின் அண்ணனிடம் கேட்டுள்ளார். ஆனால் செல்போன் வாங்கி தராததால் மனம் உடைந்த மாணவி குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ராயலான் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் கல்வி கற்பதற்கு செல்போன் இல்லாத ஏழை வீட்டு மாணவி தற்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







