--- --:--:-- --

திருநங்கைகள் உரிமைச் சட்டத் திருத்தத்திற்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

7

க்களவையில் பெரும் விவாதங்களுக்கு இடையே, ‘திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்டம் 2026’ குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 2019-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மூலச் சட்டத்தில் சில முக்கிய மாற்றங்களைச் செய்யும் நோக்கில் இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, ஒரு திருநங்கை தனது அடையாளச் சான்றிதழைப் பெற மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்த புதிய திருத்தச் சட்டம் அந்த நடைமுறையில் சில நிபந்தனைகளைக் கொண்டு வந்துள்ளது.

 

இனி அடையாளச் சான்றிதழ் வழங்கும் முன், ஒரு நியமிக்கப்பட்ட மருத்துவக் குழுவின் பரிந்துரையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்வார். இந்த மருத்துவக் குழுவிற்கு தலைமை மருத்துவ அதிகாரி அல்லது துணைத் தலைமை மருத்துவ அதிகாரி தலைமை தாங்குவார். தேவைப்பட்டால் மற்ற மருத்துவ நிபுணர்களின் உதவியையும் மாவட்ட ஆட்சியர் நாடலாம்.

 

இந்த அடையாளச் சான்றிதழின் அடிப்படையில், திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழ் மற்றும் இதர அதிகாரப்பூர்வ ஆவணங்களில் தங்களின் முதல் பெயரை மாற்றிக்கொள்ள உரிமை வழங்கப்படுகிறது. இந்த மசோதா திருநங்கைகளின் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பாதிக்கப்படும் மக்களிடமே ஆலோசிக்காமல் இந்தத் திருத்தங்களை முன்னெடுக்கக் கூடாது. பாதுகாப்பு என்ற பெயரில் கொண்டு வரப்படும் சட்டத்தை அந்தச் சமூகமே எதிர்க்கும் போது, அதைத் திணிக்கக் கூடாது. ஒன்றிய பாஜக அரசு உடனடியாக இதை நிறுத்திவிட்டு, திருநங்கைகளுடன் முறையான ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

 

Right Menu Icon