மோடியை பாராட்டுவதற்கு கூட ஸ்டாலினுக்கு மனமில்லை – தமிழிசை
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “முதலில் நம் ராணுவ வீரர்களுக்கு எனது மிகப்பெரிய பாராட்டையும், துணிச்சலான முடிவு எடுத்த பிரதமர் மோடிக்கு இந்த உலகமே பக்கபலமாக இருப்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன். தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் என்பதை நேற்று நள்ளிரவில் செய்து காட்டி இருக்கிறோம்.
தீவிரவாதத்திற்கு இந்தியாவிலும், இந்த உலகத்திலும் இடமில்லை என்பதை பிரதமர் மோடி பதிவு செய்திருக்கிறார். இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கையை கூட விமர்சனம் செய்பவர்கள் தமிழகத்தில் இருப்பது வேதனையாக இருக்கிறது. நேற்று முன் தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் சட்டவிரோதமாக பாகிஸ்தானியர்கள் இருந்தால், அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று தான் கூறினோம். அதை மதக்கலவரம் உருவாக்க ஏற்பாடு செய்ததை போன்று, முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் பேசுகிறார்கள்.
கோவையில் சட்ட விரோதமாக பணியாற்றிய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு கூட தெரிவிக்கவில்லை. பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பிரதமருக்கு எதிரான போக்கையும், மத்திய அரசுக்கு விரோதமான போக்கையும் இந்த இக்கட்டான சூழலில் முதலமைச்சர் வெளிப்படையாக பதிவு செய்கிறார் என்பது தான் வேதனையாக இருக்கிறது.
நான்கு ஆண்டுகள் ஆட்சி குறித்து பெருமையாக பேசுகிறார்கள். ஆனால், பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டு, கூலிப்படையின் அராஜகம் அரங்கேறி வருகிறது.
வேங்கைவயல் விவகாரத்தில் இன்று வரை பதில் இல்லை. புதுக்கோட்டையில் சாதிய வேற்றுமையால் கலவரம் வெடித்துள்ளது. குழந்தைகள் மத்தியில் கூட சாதி வேற்றுமை நிலவுகிறது. ஆனால், கடந்த ஒரு வாரமாக நான்கு ஆண்டு கொண்டாட்டம் நடைபெறுகிறது. இது தான் அவர்களுக்கு கடைசி கொண்டாட்டமாக இருக்கும்.





