--- --:--:-- --

உள்ளாட்சித் தேர்தல்: நாளை மறுதினம் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..? – நடக்குமா?என்ற சந்தேகமும் நீடிப்பு!!

images

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்ற பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பை நாளை மறுதினம் (டிசம்பர் 2) வெளியிட மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தமிழகத்தில், கடந்த 2016 அக்டோபரில் நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் /கடந்த 3 ஆண்டுகளாகவே பெரும் இழுபறியாகவே இருந்து வருகிறது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் கெடுபிடியால், டிசம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்திவிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்தது. இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

 

ஆனால், தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்ற விவாதங்களும் சமீப நாட்களாக தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருவதே இதற்குக் காரணம். திடீரென மறைமுகத் தேர்தல் என தமிழக அவசரச் சட்டம் பிறப்பித்தது, மாவட்டங்கள் பிரிவினையால் தொகுதி வரையறை பிரச்னை, இட ஒதுக்கீடு போன்றவற்றை எழுப்பி அதிமுக அரசு மீது திமுக குற்றம் சாட்டி வருகிறது.

 

இதனால், தேர்தலை சந்திக்க பயந்து,யாரேனும் நீதிமன்றம் சென்று தடைபெற மாட்டார்களா? என ஆளும் அதிமுக அரசு குளறுபடி செய்வதாக திமுக குற்றம் சாட்டுகிறது. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, தேர்தல் நடந்தே தீரும். திமுக தான் தேர்தலை சந்திக்க அஞ்சுகிறது. இதனால் தேர்தலுக்கு முட்டைக்கட்டை போடப் பார்க்கிறது என எதிர் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.

 

இதற்கிடையே, வார்டுகள் மறு வரையறை, இட ஒதுக்கீடு போன்றவற்றில் இறுதி முடிவு எட்டப்படாமல் தேர்தலை அறிவிக்க தடை கோரி திமுக தரப்பில் மட்டுமின்றி வரிசையாக 6 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

இந்த வழக்குகளும் பட்டியலிடப்பட்டு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இப்படி தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளஅதே வேளையில், தேர்தலை எந்த வகையில் நடத்தினாலும், அதனை எதிர்கொள்ளவும் தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவாலாக தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தேதியை முடிவு செய்வதில் தமிழக தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நகர்ப்புறம், கிராமப்புறம் என இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்துவது எனவும் ஆணையம் முடிவு செய்துள்ளதாம்.

 

அதன்படி பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலை டிசம்பர் இறுதிக்குள் நடத்த முடிவு செய்துள்ளதாம். நாளை மறுநாள் (டிசம்பர் 2) முதற்கட்ட தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலை , ஜனவரி முதல் வாரத்தில் நடத்தவும் மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறுமா? நீதிமன்றம் மூலம் தடை விதிக்கப்படுமா? என்ற சந்தேகம் அரசியல் கட்சிகளிடையே மட்டுமின்றி, பொதுமக்களிடையேயும் நிலவுகிறது.

Leave a Reply

Right Menu Icon