திருவாடானை அரசு கல்லூரியில் சிறுதானிய உணவு தயாரிப்பு பயிற்சி வகுப்பு..!
திருவாடானை அரசு கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோர்களுக்கு சிறுதானிய உணவு தயாரிப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில், குறிப்பாக திருவாடனை வட்டாரத்தில் தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பெண்களை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மேம்படுத்தும் நோக்கில், அவர்களைத் தொழில் முனைவோராக உருவாக்கும் முயற்சியில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ராமநாதமரம் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (TANSIM) இணைந்து மூன்று நாள் சிறப்புப் பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்திருந்தன. இந்த பயிற்சி வகுப்பில், திருவாடனை வட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்று, சிறுதானியத்தின் மூலம் பல்வேறு வகையான உணவுப் பொருட்களைத் தயாரிப்பது குறித்து நேரடி செயல்முறை பயிற்சி பெற்றனர்.

சிறுதானியங்களின் சத்தூட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிறுதானிய உணவுப் பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்துவதன் மூலம் பெண்கள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையவும் இந்தப் பயிற்சி வகுப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று நாள் பயிற்சி வகுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த அனைத்துப் பெண்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்பயிற்சி வகுப்பின் மூலம் புதிய தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்ட பெண்கள் தொழில் முனைவோர்களாக வளர்ந்து, தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி, சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாவட்ட திட்ட மேலாளர் பொன் வேல்முருகன் செய்திருந்தார். இது போன்ற பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், பெண்கள் இத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.






