--- --:--:-- --

கவர்ச்சியை காட்டி கோடிகள் சுருட்டல்! பெண் விரித்த வலையில் சிக்கி பணமிழந்த பரிதாபம்..! திருப்பூரின் பலே மோசடி கும்பல் பிடிபட்ட பகீர் பின்னணி.!!

gdhsf

கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு பணம் சுருட்டுவோருக்கு மத்தியில், திருப்பூரில் இளம் பெண்ணின் கவர்ச்சியைப் பயன்படுத்தி பலரிடம் ரூ.200 கோடியை சுருட்டிய கும்பல், கையும் களவுமாக சிக்கியுள்ளது. பெண்ணின் அழகில் மயங்கி, ஸ்பின்னிங் மில் இருக்கிறதா என்று கூட சரி பார்க்காமல் பலரும் பணத்தை கொட்டியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள வேலப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார், வயது 51. இவர் தனது அண்ணன் விஜயகுமார் (53) , அண்ணன் மகன் ராகுல் பாலாஜி (27), மற்றும் பிரவீனா (41) ஆகியோரைக் கொண்டு, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நூதன முறையில் இத்தகைய மோசடியைச் செய்துள்ளார். பார்ப்பதற்கு, சினிமா கவர்ச்சிக்கன்னியப் போல இருக்கும் பிரவீனாவின் அழகைக் காட்டி, பலரை அதில் மயங்கச் செய்து பலரிடம் பணத்தை இந்த கும்பல் சுருட்டியுள்ளது.

 

நிலம் மற்றும் வீட்டை அடமானம் வைத்து வங்கியில் கடன் தேவைப்படுவோரின் விவரங்களை இடைத்தரகர்கள் மூலம் பெற்றுக்கொண்ட இந்த கும்பல், பின்னர் அவர்களைச் சந்தித்து சொத்துகள் மீது கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தைக் கூறியிருக்கிறது. அத்துடன், கூடுதலாக வங்கியில் கடன் பெற்று அதை தனது ஸ்பின்னிங் மில் தொழிலில் முதலீடு செய்தால், மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கும் என்று கூறி 60-க்கும் மேற்பட்டோரிடம் சிவக்குமார் கும்பல் ரூ.200 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை சேர்ந்த சத்தியமூர்த்தி, ரத்தினசாமி, குமரேசன், பிரியா, உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், ஆதாரமில்லை என்று சாக்குபோக்கு சொல்லி, வழக்கம் போல் போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, பணத்தை பறிகொடுத்தவர்கள் திருப்பூர் கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தனர். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பல்லடம் காவல் நிலையத்தில்,கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த குமரேசன் (48) என்பவர் புகார் செய்தார்.

 

இதன் பிறகு, சோம்பல் முறித்து எழுந்த போலீசார், விசாரணையை தொடங்கினர். சிவக்குமார் உட்பட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சௌமியா தலைமையிலான தனிப்படை போலீசார் தேடத் தொடங்கினர். இதையறிந்த சிவக்குமார், விஜயகுமார், ராகுல் பாலாஜி, பிரவீணா ஆகியோர் தலைமறைவான நிலையில், தமிழரசன் சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அதன் தொடர்ச்சியாக சிவக்குமார், அவரது ஆசை நாயகினான பிரவீனா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இருவரும் டிமிக்கி கொடுத்து எஸ்கேப் ஆகினர். இதையடுத்து, அவர்களுக்கு எதிராக, பல்லடம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

 

போலீஸ் தேடுவதை அறிந்த சிவக்குமார்- பிரவீனா ஜோடி தலைமறைவானது. எனினும் தனிப்படை போலீசார் சல்லடை போட்டு தேடி வந்த நிலையில், இவர்களில் பிரவீணா மட்டும் திருச்சியில் சிக்கினார். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு, கண்ணீர் சிந்தி தனக்கு அனுதாபம் தேடிக் கொண்டிருந்தவரின் சமூக வலைதளக் கணக்கை பயன்படுத்தி, கச்சிதமாக போலீசார் அமுக்கினர். அவரிடம் தொடர்ந்து துருவித்துருவி போலீசார் விசாரணை செய்ததில், தேனியில் தலைமறைவாக இருந்த சிவக்குமாரும் சிக்கினார். அவரை பல்லடம் அழைத்து சென்று மருத்துவப் பரிசோதனைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிவக்குமாரின் அண்ணன் விஜயகுமார், அவர் மகன் ராகுல் பாலாஜி ஆகியோரைத் தேடிவருகின்றனர்.

எத்தனையோ நிதி மோசடிகள், தினம் தினம் புதுப்புது நூதன சுருட்டல்கள், கடன் வாங்கித் தருவதாகக்கூறி பண மோசடி என்று கேள்விப்பட்டு வருகிறோம். செய்திகளில் பார்க்கிறோம். காவல்துறையினரும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும், பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அழகான பெண் தனது கவர்ச்சியைக் காட்டி, பல் இளித்துப் பேசிவிட்டால் அதில் மயங்கி இப்படியா பணத்தை வாரிக் கொடுப்பது? கவர்ச்சிகரமான அறிவிப்புகளுக்கு மயங்கி பணத்தை இழந்ததைப் பார்த்துள்ளோம். ஆனால், பல்லடம் மோசடி விவகாரத்தில் இளம் பெண்ணின் கவர்ச்சியைப் பார்த்து மயங்கி பணத்தை பலரும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உல்லாசமாக ஊர்சுற்றிய
சிவக்குமார்- பிரவீணா!

பெண் மீதான மோகத்தில் விழுந்த சிவக்குமார், அந்த பெண்ணை வைத்தே பற்பல மோசடிகளை அரங்கேற்றியுள்ளார். இதற்கு காரணமான சிவக்குமார் – பிரவீணாவின் கள்ளக்காதல் கதை வித்தியாசமானது.

 

51 வயதான சிவக்குமாருக்கு, வயதானாலும் பணத்தின் மீதான மோகமும் பெண் மீதான மோகமும் தீரவில்லை. சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, பல்லடம் – மங்கலம் சாலையில் உள்ள பிரவீணா என்பவரின் பியூட்டி பார்லருக்கு ஃபேஷியல் செய்வதற்கு மனைவியை சிவக்குமார் அழைத்துச் சென்றுள்ளார். அப்போதுதான், முதல் முறையாக பிரவீணாவை பார்த்திருக்கிறார். அவரது துள்ளல் அழகில் மயங்கிய சிவக்குமார், பிரவீணாவை தனது ஆசை நாயகியாக வளைத்துப்போட திட்டம் போட்டார்.

 

அதன்படி, தான் ஸ்பின்னிங் மில் வைத்துள்ளதாகவும், அதில் பங்குதாரராகச் சேர்ந்தால், அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை இருவரும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டப்போகிறது என்ற ஆசையில், பிரவீணாவும் இதற்கு சம்மதித்தார். அதன்படி, தனது வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து, ஸ்பின்னிங் மில்லில் முதலீடு செய்வதற்கு சிவகுமாரிடம் ரூ. 20 லட்சத்தை கொடுத்தாராம்.

ஆனால், சிவக்குமாரிடம் உண்மையில் ஸ்பின்னிங் மில் இல்லை. நாளடைவில் இதைத் தெரிந்து கொண்ட பிரவீணா, பணம் கேட்டு குடைச்சலை கொடுக்க ஆரம்பித்தார். அவரை சமாளிக்க, கரூரில் உள்ள வேறொரு நபரின் ஸ்பின்னிங் மில்லை காட்டி, அது தன்னுடையது என்று கதையளந்துள்ளார். ஆனால், சீக்கிரமே சிவக்குமாரின் வண்டவாளம் வெளிச்சத்துக்கு வர, பணத்தைக் கேட்டு பிரவீணா நச்சரிக்க ஆரம்பித்துள்ளார். அவரை சமாளிக்க, இன்னொரு கதையை அளந்துவிட்டுள்ளார் சிவக்குமார்.

 

பிரவீணாவை ஏமாற்றிய அதே பாணியில் சிவக்குமாரும் பிரவீணாவும் சேர்ந்து மற்றவர்களின் காதில் பூச்சுற்றத் தொடங்கினார். ஸ்பின்னிங் மில் பார்ட்டனர் ஆகலாம் என்று சொல்லி, 50-க்கும் மேற்பட்டோரிடம் இருவரும் ரூ. 200 கோடி வரை பணத்தை வசூல் செய்யத் தொடங்கினர். பணம் புரள ஆரம்பித்த அதே நேரம், பிரவீணா- சிவக்குமார் இருவரின் நெருக்கம், கள்ளக்காதல் வரை சென்றதாக கூறப்படுகிறது. இருவரும் பல இடங்களில் ஒன்றாகச் சுற்றியுள்ளனராம். பிரவீணாவின் அழகில் சொக்கிப் போன சிவக்குமார், அதே அழகை மூலதனமாக்கி, பிரவீணாவின் முகத்தைக்காட்டி பணம் கறந்துள்ளார். இதற்கு சிவக்குமாரின் சகோதரர், அவரது மகனும் உடந்தையாக இருந்துள்ளனர். பணத்தாசையும், பெண்ணாசையும் இவர்களை தற்போது கம்பி எண்ணச் செய்துள்ளது.


 

Leave a Reply

Right Menu Icon