அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக செங்கோட்டையன் பதில்..!
அதிமுக முன்னாள் அமைச்சர், அதிமுகவில் இருந்து பிரிந்துச் சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என செய்தியாளர் சந்திப்பு நடத்தி அறிவித்திருந்தார். இதனையடுத்து அவரது கட்சியின் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் மட்டும் தொடர்ந்தார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருடன் சேர்ந்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கூட்டாக செய்தியாளர் சந்திப்பும் நடத்தினார்கள்.
இதனையடுத்து, அங்குவந்திருந்த சசிகலாவையும் செங்கோட்டையன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சென்று சந்தித்தனர்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், செங்கோட்டையன் நீக்கப்படுவாரா நீக்குவதற்கு தயக்கமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், எந்தத் தயக்கமும் இல்லை. முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனும் ரீதியில் பதில் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், தற்போது செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து செங்கோட்டையனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நாளை காலை 11 மணிக்கு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அனைத்திற்கும் விளக்கம் கொடுக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.






